வெள்ளைப்பூண்டு நெடுங்காலமாக உலகம் முழுவதும் உள்ள உணவு வகைகளுக்கு நறுஞ் சுவையூட்டும் பொருளாகவும், உடல் சம்பந்தமான கோளாறுகள் பலவற்றிற்கு மருந்தாகவும், அறியப்பட்டு வருகிறது.
நறுமணப் பொருட்களில் ஒன்றாகவும் இந்தியா முழுவதும் வெள்ளை பூண்டு நெடுங்காலமாக பயிரிடப்பட்டு வந்திருக்கிறது. வெள்ளைப்பூண்டு ஆண்டு முழுவதும் வளரும் செடி. குறுகிய அகலம் உள்ள தட்டையான இலைகளும், வெள்ளை பூக்களும் கொண்டது.
ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் இருக்கும். சிறிய பூண்டுகள் வெள்ளை நிற காகிதம் போன்ற உறையால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை விட வெள்ளைப்பூண்டின் மனம் அழுத்தமாக இருக்கும்.
சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் பூண்டு பலவிதமான ஜீரணக் கோளாறுகளை அகற்றுவதால் மருத்துவ மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேல்நாடுகளில் பூண்டு கிருமி நாசினியாகவும், உடல் சருமத்தில் ஏற்படும் அழுகிய நிலை குணமாக்கும் மருந்தாகவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பூண்டின் மருத்துவ சிறப்பு
உடலுக்கு தேவையான முக்கிய சக்தியாக கருதப்படும் கார்போஹைட்ரேட் எனும் சத்துப்பொருள் பூண்டில் அமைந்துள்ளது. புரதச்சத்து பூண்டில் நிறைய உள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தும் இதில் உள்ளது .
வைட்டமின் சத்து போதிய அளவுக்கு இல்லாவிட்டால் உடலில் எலும்புகள் பலவீனமடையும். குறிப்பாக பல் ஈறுகளில் பல்வேறு விதமான நோய்கள் உண்டாகும். சொறி சிரங்கு போன்ற பாதிப்புகள் வரும்.
பூண்டு உஷ்ணத்தை உண்டாக்கி வாயுவை முற்றிலுமாக அகற்றுகிறது. இது நோய் வராமல் பாதுகாக்கும் ஆற்றலுடையது. பூண்டை அன்றாடம் ஏதோ ஒரு வகையில் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டால், இதயத் துடிப்பை இயல்பாக இயங்கச்செய்யும். ரத்த அழுத்தத்தை சமப்படுத்தவும், நுரையீரல் தொடர்பான பிணிகளை குணமாக்கும் பூண்டு உதவுகிறது.
ஜீரணக் கோளாறுகளுக்கு பூண்டை விட நல்ல மருந்து கிடையாது.
பசும் பாலில் பூண்டை வேகவைத்து பாலை குடித்தால் வாயு கோளாறுகள் மூச்சுத் திணறல் இருந்தால் உடனே நல்ல குணம் தெரியும்.