மாணிக்கம் வயது 25 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். சொந்தமாக இருக்கும் இடம் ஈரோடு. சனி ஞாயிறு என்று வந்துவிட்டால் அலறியடித்துக்கொண்டு ஈரோட்டிற்கு வந்துவிடுவான்.பின்னர் ஞாயிறு நள்ளிரவில் கிளம்பி திங்கட்கிழமை திருநெல்வேலிக்கு வேலைக்கு சென்றுவிடுவான்.
அவ்வாறிருக்க ஒருநாள் மாணிக்கம் அவசரம் அவசரமாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான்.அண்ணே அண்ணே அந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு விடுங்க என ஆட்டோகாரரிடம் கேட்டுக்கொண்டான்.
என்ன தம்பி கொஞ்சம் பொறுங்கள் நான் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடறேன்.
வேண்டாம் அண்ணா பஸ் ஸ்டாண்டுக்கு கூட நூறு நூற்றைம்பது ரூபாய் வாங்குவீங்க. இங்கேயே இறக்குங்க. நான் கை மறித்து பஸ்ல ஏறிக்கிறேன்.
தம்பி நள்ளிரவு ஆச்சு இந்த ஆளில்லாத பஸ் ஸ்டாப்லயா இறக்கிவிட சொல்றா.
அண்ணே நான் என்ன பொம்பள புள்ளையா. இங்கேயே இறக்கி விடுங்க.நான் கை மறித்து பஸ்ல ஏறிப்பேன். பஸ் கண்டக்டர் எனக்குத் தெரிந்த நபர் தான் என்று ஆட்டோகாரரிடம் அடம் பிடித்தான் மாணிக்கம்.
சரி தம்பி என்னமோ சொல்றீங்க போங்க என அந்த ஆட்டோக்காரர் ஆட்டோவை அந்த பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினார்.
நள்ளிரவு நேரத்தில் அந்த பஸ் ஸ்டாப்பில் யாரும் இல்லை. ஆனால் எதிர் திசையில் ஒரு சின்ன டீ கடை இருந்தது. ஆட்டோகாரரிடம் பணத்தைக் கொடுத்து விட்டு எதிர் திசையில் இருந்த டீ கடைக்கு சென்றான் மாணிக்கம்.
அந்த நள்ளிரவு நேரத்திலும் சூடாக போண்டா போட்டுக்கொண்டிருந்தார் அந்தக் கடையின் முதலாளி.
அண்ணே ஒரு டீ ஒரு போண்டா என்று கடைக்கு முன் இருந்த பலகை இருக்கையில் அமர்ந்தான் மாணிக்கம்.
பின்பு சூடான டீயை ஊதி ஊதி குடித்துவிட்டு போண்டாவை சாப்பிட்டான்.
டீக்கடைக்காரர் போண்டா உடன் ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பர் காகிதத்தையும் கொடுத்திருந்தார்.
அந்தக் காகிதத்தை விரித்து பார்க்க நினைத்தபோது உடனே பேருந்து வரும் சத்தம் கேட்க தன் கவனத்தை ரோட்டில் செலுத்தினான்.
திருநெல்வேலி போர்டு போட்டு ஒரு பேருந்து வந்தது. என்ன இது அதுக்குள்ள வந்திருச்சா என்று மளமளவென்று அந்த நியூஸ் பேப்பர் காகிதத்தை கசக்கி தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டுதாம் எடுத்து வந்திருந்த பைகளை தோளில் சுமந்து தான் கைகளால் பேருந்தை நிப்பாட்டுமாறு சைகை காட்டினான்.முன்வந்த பேருந்தை அவனருகே நின்றது.
பேருந்து நிற்க அவன் பேருந்தில் ஏறினான்.திருநெல்வேலி தானே என்று கேட்டான் மாணிக்கம்.
ஆனால் கண்டக்டர் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார்.
சரி சரி தூக்கக்கலக்கத்தில் இருக்காரு போல என அதட்டி கொண்டு நடுவில் இருக்கும் ஒரு சீட்டில் சென்று அமர்ந்தான்.
அந்தப் பேருந்தில் நள்ளிரவில் அவனையும் சேர்த்து ஒரு ஐந்து பேர்தான் இருந்தனர். நள்ளிரவு நேரம் ஆச்சு அதான் இங்க யாருமில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி வேடிக்கை பார்த்தான் மாணிக்கம்.
பேருந்து மடமடவென்று வேகமாக சென்று கொண்டிருந்தது.புதுசா பேருந்து விட்டிருப்பார்களோ இந்த பஸ்ஸ நான் பார்க்கவே இல்லையே என்று பஸ் முழுவதும் சுற்றும் முற்றும் பார்த்தான்.
அந்தப் பேருந்து சற்று பழைய பேருந்து மாதிரி தெரிந்தது. பின்னர் கண்டக்டரை பார்த்தான்.என்ன இது டிக்கெட் வாங்காமல் தூங்கிட்டு இருக்காரு. சரி அவரே வருவார் என்று ஜன்னலை நோக்கி மீண்டும் வேடிக்கை பார்த்தான்.
அப்போது சுற்றியுள்ளவர்களையும் அவன் நோட்டமிட ஒரு வயதான பெரியவர், ஒரு 35 வயது தக்க பெண் அவள் கூட 16 வயது உடைய அவளது மகள் மற்றும் அவளது கணவர் என மூவரும் ஒரு சீட்டில் அமர்ந்து இருந்தனர்.
அந்த வயதானவர் மற்றும் அந்த குடும்பம் மற்றும் மாணிக்கம் மட்டுமே அந்தப் பேருந்தில் ஐந்து பேர் தான் பயணித்துக் கொண்டிருந்தனர்.
பேருந்து வழியில் எங்கும் நிற்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணிக்கம் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் ஏதோ கடகடவென்று இழுக்க வெளியே எடுத்துப் பார்த்தான்.
அதில் அந்த நியூஸ் பேப்பர் இருந்தது.
அட சை இதை இன்னுமா தூக்கி போடாமல் பேண்ட் பாக்கெட்டுக்குள் வச்சிருக்கோம் என தன்னையே திட்டிக் கொண்டான் மாணிக்கம்.
உடனடியாக அந்தத் துண்டு நியூஸ்பேப்பர் காகிதத்தை கசக்கி ஜன்னலில் தூக்கி எறிந்தான்.ஆனால் காற்று வேகமாக அடித்ததால் அந்தக் காகிதம் மீண்டும் அவன் முகத்தில் வந்து ஒட்டியது.
என்னடா இது கசக்கி தானே போட்டோம். மறுபடியும் என் மேலே விழுது என்று கோபப்பட்டான் மாணிக்கம்.அவன் காகிதத்தை தூக்கிப் போட்டதை பார்த்த கொண்டிருந்த முதியவர் ஜன்னல சாத்து பார்த்து ரொம்ப அதிகமா காற்று அடிக்குது என்று மாணிக்கத்தை திட்டினார்.
இந்த பெருசுக்கு வேற வேலை இல்லை ஒட்டுமொத்த பஸ்ளையும் வெறும் அஞ்சு பேரு தான் இருக்கும் காற்று அடிக்குதுன்னா தள்ளி போய் உட்கார வேண்டியது தானே.வயதானாலே இப்படித்தான் புத்தி மக்கி போயிரு மாட்டுக்கு என்று கோபித்துக்கொண்டு ஜன்னலை சாத்தினான் மாணிக்கம்.
பின்னர் ரொம்ப போரடிக்குது என்று l மாணிக்கம் புலம்ப கையில் இருந்த துண்டு நியூஸ்பேப்பர் காகிதத்தை விரித்துப் பார்த்தான். சரி இந்த குட்டி நியூஸ் பேப்பர்ல ஏதாவது சுவாரசியமான நியூஸ் இருக்கான்னு பார்ப்போம் என ஆர்வத்துடன் படித்தான்.
அந்த பேப்பரின் தேதியை பார்த்தான் 2019 வருடம் குறிப்பிட்டிருந்தது. அட அஞ்சு வருஷம் பழைய நியூஸ் பேப்பரை அந்த தான் டீக்கடைக்காரர் வச்சிருக்காரு பலே பலே. சரி என்னவென்று பார்ப்போம் என்று அந்த துண்டு காகிதத்தில் இருந்த செய்தியை பாடித்தான்.
திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து ஏரியில் விழுந்து ஐந்து பேர் மரணம் என்று போட்டிருந்தது.
அட பாரப்பா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலிக்கு போற பஸ் ஆக்சிடென்ட் என்று மேலும் ஆச்சரியத்துடன் படித்தான் மாணிக்கம்.
ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி புறப்பட்ட அரசு பேருந்த மதுரை அருகே செல்லும்போது ஒரு ஏரியில் விழுந்தது. பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் பேருந்தில் இருந்த 5 பேரும் அந்த சம்பவத்தையே உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தது. பேருந்தில் பயணித்த அப்பா அம்மா மகள் என மூவர் சேர்ந்த ஒரு குடும்பமும்,ஒரு வயதான முதியவரும் மற்றும் ஒரு 25 வயது மிக்க இளைஞர் மாணிக்கம் என்றும் அவன் பெயர் போட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தான்
அந்த செய்தியை பார்த்த மாணிக்கம் தலைசுற்ற ஆரம்பித்தது. சுற்றி முற்றி பார்த்தான்.அந்தப் பேருந்தில் ஐந்து பேர்தான் இருந்தனர்.
பின்னர் அச் செய்தியை மேலும் படித்தான்.
டிரைவர் கண்டக்டர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று போட்டிருந்தது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் தேடி தேடி வருவதாக போட்டிருந்தது. அதனைப் பார்த்து பயந்த மாணிக்கம் மெல்ல தன் தலையை மேலே தூக்கி கண்டக்டரை பார்த்தான்.
அதுவரை தூங்கிக் கொண்டிருந்த அந்த கண்டக்டர் மாணிக்கத்தை முறைத்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த மாணிக்கம் பயத்தில் அலறினான். ஏய் இந்தாளே டிக்கெட் காசு கொடு என்று கண்டக்டர் உறுமும் குரலில் கேட்டார்.
இந்தாங்க சார் என்று நான் ஒரு 400 ரூபாயை கொடுத்தான். அவரும் டிக்கெட்டை கொடுத்த விட்டு மீண்டும் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.
என்ன இது இந்த நியூஸ் பேப்பர் விசித்திரமா இருக்கு என்று முழித்துக் கொண்டிருந்தான். மேலும் அந்த செய்தித்தாளில் அப்பேருந்து மதுரைக்குச் செல்லும் ஒரு ஏரியில் கவிழ்ந்து விழுந்ததாக போட்டிருந்தது. உடனடியாக தனது செல்போனை எடுத்து கூகுள் மேப்பை ஓபன் செய்து அந்த ஏரியை பார்த்தான். குறிப்பிட்ட அந்த ஏறி வருவதற்கு இன்னும் 15 நிமிடங்களே இருந்தன.
அதனைப் பார்த்து மாணிக்கம் அதிர்ந்தான்.
உடனே செய்வதறியாது திகைத்து இருந்தான். மேலும் அந்த செய்தித்தாளை இன்னும் புரட்டிப் பார்த்தான். அதில் பேருந்தின் எண் போட்டிருந்தது.
அதில் கடைசி எண் 3468 இதனைப் பார்த்த மாணிக்கம் அதிர்ந்தான். ஏனென்றால் அவன் டீக்கடையில் பேருந்தை மரித்த போது அப்பேருந்து நோட்டமிட்ட அவன் l அதே 3468 நம்பரை தான் பார்த்து இருந்தான்.
அப்படி என்றால் இந்தப் பேருந்து தான் அந்த பேருந்து . என்ன இது விசித்திரமாக இருக்கிறது என்று பயந்தான். அப்போது அந்தப் பேருந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்க பேருந்தின் வேகத்தை பார்த்து மாணிக்கம் டிரைவரை மெதுவாக வண்டியை செலுத்துமாறு கூறினான்.
ஆனால் டிரைவர் பதிலளிக்கவில்லை. கண்டக்டரும் திரும்பி மாணிக்கத்தை முறைத்துக் கொண்டிருந்தார். உடனடியாக மாணிக்கம் கூகுள் மேப்பை பார்க்க அந்த ஏரி வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே உள்ளன எனக் காட்டியது.
பேருந்து அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்க மாணிக்கம் முன்னே சென்ற டிரைவரிடம், டிரைவர் ஒழுங்கா வண்டி மெதுவாக ஓட்டுங்கள் சொல்றேன்ல என்று அதட்டி கூறினான்.
ஆனால் டிரைவர் பதில் அளிக்கவே இல்லை. இதனால் செய்வதறியாது திகைத்த மாணிக்கம் நீங்க வண்டியை நிறுத்த போறீங்களா இல்ல போலிஸ கூப்பிடட்டுமா என்று மிரட்டினான். அப்போதும் அந்த ட்ரைவர் பதில் அளிக்கவே இல்லை. கண்டக்டரும் மாணிக்கத்தை முறைத்து கொண்டுதான் இருந்தார்.
யோவ் டிரைவர் நிறுத்த சொல்றேன்ல நிறுத்துங்க நிறுத்துங்கள் என மீண்டும் பயத்தில் அலறினான் மாணிக்கம். ஆனால் அந்த டிரைவர் அவனது அலறல் கூச்சத்திற்கு செவிசாய்க்கவில்லை.
இதனால் கோபப்பட்ட மாணிக்கம் தன் பைகளை எடுத்துக்கொண்டு பேருந்தை விட்டு கீழே குதிக்க தயாரானான். பேருந்து அந்த செய்தித்தாளில் போட்டு இருந்ததைப் போலவே ஏரியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
மாணிக்கம் அலறினான். நிறுத்துங்க என்றான். எவரும் செவிசாய்க்கவில்லை. பின்னர் அங்கிருந்த அந்த குடும்பத்தினரிடம் இந்த பேருந்து ஏரியில் விழப் போகுது. சீக்கிரம் வாங்க என்றான்.
ஆனால் அவர்களும் செவிசாய்க்கவில்லை. அந்த முதியவரும் செவிசாய்க்கவில்லை.
பேருந்து ஏரியை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்க குபீரென்று பேருந்தை விட்டு குதித்தான் மாணிக்கம். அருகில் இருந்த ஒரு மரத்தில் அவன் முதுகு பட்டு பலத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தான்.
அந்த பேருந்து அந்த செய்தி தாளில் போட்டி இருந்ததைப் போலவே அந்த ஏரியின் பாலத்தை இடித்து பறந்து சென்று ஏரியில் விழுந்து சிதறியது.
அடக்கடவுளே நூலிழையில் உயிர் தப்பி இருக்கோம் என்று அவசர அவசரமாக அந்த ஏரியை நோக்கிச் சென்றான் மாணிக்கம். அந்த ஏரியை பாலத்தின் மேலே இருந்து பார்த்த போது அந்தப் பேருந்துக்குள் இருந்து ஒரு நான்கு வெள்ளை உருவம் பறந்து வானத்தை நோக்கி சென்றது.
அது சென்று கொண்டிருப்பதை உற்றுப் பார்த்த மாணிக்கம் அப்படின்னா இவங்க எல்லாரும் ஆவியா அப்படின்னா அந்த டிரைவர் கண்டக்டர் என பார்த்தபோது அந்த டிரைவரும் கண்டக்டரும் அந்த ஏரியின் கரையில் இருந்து நடந்து மாணிக்கத்தை பார்த்து சிரித்துக்கொண்டே அருகில் இருந்த காட்டை நோக்கி சென்றனர்.
பயத்தில் மாணிக்கம் செய்வதறியாது திகைத்தான்.சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு நாற்பது வயது தக்க ஆண் நபர் நடந்து வந்துகொண்டிருந்தார். ஐயா ஏரியில் பேருந்து விழுந்திருச்சு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடந்து வரிங்க என அவரிடம் கோபப்பட்டு கேட்டான் மாணிக்கம்.
என்னது பேருந்து ஏரியில விழுந்திருச்சா எங்கே என்று எட்டிப் பார்க்க அங்கே ஒன்றும் அவன் கண்களுக்கு தென்படவில்லை.
என்னப்பா சொல்ற என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே. அய்யா பாருங்கய்யா அங்க பாருங்க பேருந்து கவிழ்ந்து விழுந்து கிடக்கிறது உங்க கண்ணுக்கு தெரியலையா என்று கோபப்பட்டான் மாணிக்கம்.
எலே நைட் நேரத்துல என்ன குடிச்சிட்டு வந்திருக்கியா என்று அந்த நபர் மாணிக்கத்திடம் சரமாரியாக கேள்வி கேட்டார். லூசு பையன் குடிச்சி இருப்பான் போல என்று அவனை தள்ளி விட்டு நேராக நடந்து சென்றார்.
மாணிக்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஒரு பேருந்து சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான் திருநெல்வேலி போர்டு போட்டிருந்தது. அவனை பார்த்ததுமே பேருந்து வந்து நின்றது.
உள்ளிருந்த கண்டக்டர் என்ன தம்பி இந்த இடத்தில் வந்து இருக்கீங்க. எப்பொழுதும் பஸ் ஸ்டாப்பில் தானே நிப்பீங்க. உங்களுக்காக அங்கே கொஞ்ச நேரம் காத்துக் கிடந்தோம் போங்க என்று மாணிக்கத்தை உள்ளே ஏறச்சொன்னால் அந்தக் கண்டக்டர்.
அப்படினா இதுதான் நான் வழக்கமா போற பேருந்தா என மாணிக்கம் பேருந்தில் ஏறாமல் முழித்துக் கொண்டிருக்க என்ன தம்பி பயப்படுறீங்க சீக்கிரம் ஏறுங்க நேரமாயிடுச்சு என்று கண்டக்டர் அதட்டினான்.
கண்டக்டரின் அதட்டலுக்கு பயந்து மடமடவென்று பேருந்தில் ஏறினான் மாணிக்கம்.
தனது பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து பார்த்தான். அங்கே செய்தித்தாள் இருந்தது. அந்த செய்தித்தாளை மடமடவென்று பிரித்துப் பார்த்தான்.
பேருந்து விபத்து செய்தி போட்டிருந்த அந்த இடத்தில் இந்தியா உலகக் கோப்பை அரை இறுதியில் தோல்வியைத் தழுவியது என்ற செய்தி போட்டிருந்தது.
என்ன ஆச்சர்யம் நான் அப்போ பார்க்கிறப்போ பேருந்து விபத்து நியூஸ் தானே போட்டு இருந்துச்சு இப்போ கிரிக்கெட் நியூஸ் போட்டு இருக்குது என்று மண்டையை சொரிந்து கொண்டு குழம்பிப் போனான் மாணிக்கம்.
என்ன தம்பி ரொம்ப குழம்பிப் போன மாதிரி இருக்கீங்க என்ன கண்டக்டர் கேட்க அது ஒரு பெரிய கதை சார் என்று பெருமூச்சு விட்டான் மாணிக்கம்.
இனிமேல் 100 200 ரூபா ஆனாலும் பரவாயில்லை பஸ்ட் ஆண்டிலேயே பஸ் ஏற வேண்டியதுதான் என மனதை தேற்றிக்கொண்டு திருநெல்வேலிக்கு வந்தடைந்தான் மாணிக்கம்.
முற்றும்.
மேலும் பேய் கதைகளை படிக்க.
சிந்தித்து சிரிப்பதற்காக தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.